முனைவர் மா.வள்ளி,
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
ஜவகர் அறிவியல் கல்லூரி,
நெய்வேலி - 607 803.
கடலூர் மாவட்டம்.
மின்னஞ்சல்: mvalli1979@gmail.com
முன்னுரை
தொடக்கக் கால மக்களின் உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளே நாட்டுபுற இலக்கியங்கள் எனலாம். ஏட்டிலக்கியம் தோன்றுவதற்கு முன்பே தலைமுறை தலைமுறையாக நாட்டுப்புறப் பாடல்கள் பாடப்பெற்று வந்தன. தொல்காப்பியம் குறிப்.டும் பண்ணத்தி, பிசி, முதுமொழி, குறிப்பு மொழி ஆகியவை நாட்டுப்புற இலக்கிய வகைகள் ஆகும். 1846-இல் வில்லியம் தாமஸ் நாட்டுப்புற மக்களின் கலை இலக்கியங்களைக் குறிப்பதற்கு "Folk Lore" என்ற ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தினார். இதனை 1975-இல் முனைவர் சு.சண்முக சுந்தரம் ‘நாட்டுப்புறவியல்’ என்று மொழி பெயர்த்தார். இத்தகைய சிறப்பு வாய்ந்த நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் சமூகச் சூழலை இக்கட்டுரையில் அறியலாம்.
“பாட்டிடைக் கலந்த பொருள வாகிப்
பாட்டின் இயல பண்ணத்தி இயல்பே
அதுவே தானும் பிசியொடு மானும்”
(தொல்., பொருள். 178, 179)
என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
பண்ணத்தி - நாட்டுப்புற இசை
பிசி - விடுகதை
முதுமொழி - பழமொழி
குறிப்பு மொழி - குறிப்புப் பொருள் உணர்த்துவது.
எனவே, நாட்டுப்புற இசை மற்றும் பாடல்கள் தமிழர் வாழ்வோடு இணைந்து ‘ஏட்டில் எழுதா இலக்கியங்கள்’ என்று பெயர்பெற்று வாழ்ந்து வருகின்றன.
இலக்கியங்களில் நாட்டுப்புற கூறுகள்
சங்க கால மகளிர் பாடிய வள்ளைப் பாட்டு தற்போதைய உலக்கைப் பாட்டு ஆகும். குரவை கூத்து, துணங்கைக் கூத்து, வேலன் வெளியாடல் என்று உணர்ச்சியின் வெளிபாடுகளாகப் பாடல்கள் பாடப்பட்டன. சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்ற வரிப் பாடல்களும், குரவைப் பாடல்களும் தமிழக நாட்டுப்புறப் பாடல்களின் பழைய வடிவங்கள் ஆகும். பக்தி இலக்கியங்களில் பெரியாழ்வாரும், குலசேகர ஆழ்வாரும் பாடியுள்ள தாலாட்டும் பாடல்கள், மாணிக்கவாசகரின் அம்மானை, சாழல், ஊசல் போன்ற பாடல்கள் நாட்டுப்புறப் பாடல் வகையைச் சார்ந்தவையாகும்.
“பூசுவதும் பெண்ணீறு பூன்பதுவும் பொங்கு அரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலும் காணேடி
பூசுவதும் போசுவதும் பூண்பதுவும் கொண்டு என்னை
ஈசன் அவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ.”
(திருவாசகம் திருச்சாழல், பா.1)
என்று பெண்கள் தங்களுக்குள் பாடி ஆடுவதாக திருவாசகத்தில் பாடல்கள் அமைந்துள்ளன.
பழந்தமிழ் மக்களின் வரலாற்று களஞ்சியமான புறநானூற்றில் ஒரு மன்னனின் இறப்பை பாடுவதாக,
“இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி யணியாள்
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்லேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே!”
(புறம். பா. 242)
என்று கையறுநிலைப் பாடல் ஒப்பாரி நிலையில் அமைந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த புதுயுக கவிஞர்களும் நாட்டுப்புறப் பாடல் வடிவங்களை மிகவும் போற்றினர்.
குயில் பாட்டில் பாரதியாரும்,
“மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால்
ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்
ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும் நெல்லிடிக்கும்
கோற்றொடியார் குக்கூவெனக் கொஞ்சும் ஒலியினிலும்
சுண்ணமிடிப் பார்தம் சுவைமிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்க
கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்
வேயின் குழலோடு வீணைமுத லாமனிதர்.”
என்று நெஞ்சைப் பறிகொடுத்தாகப் பாடுகிறது.
சமூகப் புரட்சியை ஏற்படுத்திய பாரதிதாசன் அவர்கள், ஆண் குழந்தை தாலாட்டுப் பாடலில்,
“தேக்கு மரம் கடைந்து செய்ததொரு தொட்டிலிலே
ஈக்கள் நுழையாமல் இட்ட திரை நடுவில்
பொன் முகத்தி லேயிழைத்த புத்தம்புது நீலச்
சின்னமணக் கண்ணை இமைக்கதவால் மூடி வைப்பாய்.”
(பாரதிதாசன் கவிதைகள், ப.99)
என்றும், மனித வாழ்க்கையோடு இணைந்து இடையீடு இன்றி இயங்கி வரும் நாட்டுப்புறப் பாடலுக்கு இலக்கணம் இல்லை. அவை யாவும் செவி வாயாக, நெஞ்சு கள அமைந்தவை. அவை இசையுடன் பிறந்தவை, இசையால் வாழ்பவை என்பதை,
“அன்னத்தின் தூவி அனிச்ச மலரெடுத்துச்
சின்ன உடலாக சித்தரித்த மெல்லியலே!
மின்னல் ஒளியே, விலைமதியா ரத்தினமே
கன்னல் பிழிந்து கலந்த கனிச்சாறே!.”
(பெண் குழந்தை தாலாட்டு, ப.100)
என்று பாடுகிறார்.
காதல் பாடல்கள்
உலக உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானது காதல். அது உயிர் வளர்ச்சிக்கும் உலக இயக்கத்திற்கும் துணை செய்கிறது.
“எல்லா உயிருக்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வருஉம் மேவற்று ஆகும்.”
(தொல். பொருள், பொருளியல் 28)
என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
“காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்;
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம்; சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால் காதல்செய்வீர்; உலகத் தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்;
காதலினால் சாகாம லிருத்தல் கூடும்;
கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்”
என்கிறார் பாரதியார். இதனை,
“எண்ணெய் தலை அழகி
இருதோரும் பொன்னழகி
திரும்பி நடக்கையிலே
சீவன் பறி போகுதடி.”
என்று நாட்டுப்புறத் தலைவன் பாடல் வெளிப்படும்.
“சோளப்பொறி மத்தியிலே
சுட்டு வைத்த தேசையைப் போல்
தோன்றும் இந்தச் சோதிநிலா
சோதிநிலா மறையுமட்டும்
சொன்ன குறி பார்த்து
சேர்ந்திருப்பான் என் துரையை
சேரக் காலம் எப்ப வரும்.”
என்று தலையின் மனநிலையை வெளிப்படுத்தும் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
தொழிற்பாடல்கள்
உழைக்கும் தொழிலாளர்கள் தங்கள் உழைப்பின் சுமையை மறப்பதற்கும் பாடும் பாடல்கள் தொழிற்பாடல்களாகும். ஆடிப்பாடி வேலை செய்தால் சோர்வு தெரியாது. அதில் 90 விழுக்காடு மக்கள் வேளாண் தொழிலையே நம்பி இருந்தனர். ஏற்றம் இறைத்தல், நாற்று நடுதல், களை எடுத்தல், கதிரறுத்தல், வண்டியோட்டல் என்று பலவகையாகப் பெருகியுள்ளன.
“மூங்கில் இலை மேலே
தூங்கும் பனி நீரே
தூங்கும் பனி நீரை
வாங்கும் கதிரோனே.”
என்று இயற்கையை வியந்தும் பாடியுள்ளனர்.
ஏர் உழுதல்
கலப்பையை பூட்டி ஏர் உழ தொடங்குவர். அவ்வாறு உழும்பொழுது உழுகின்ற கலப்பை எப்படிப்பட்டது என்று கூறும்போது,
“சந்தனக் கலப்பை வெட்டிப் பள்ளன் உழுவான்
சாதிச் சம்மா நாத்தெடுத்து பள்ளி நடுவா
குங்குயம் கட்டவெட்டிப் பள்ளன் உழுவான்
சாதிலிங்க நாத்தெடுத்துபூ பள்ளி நடுவா.”
இப்பாடல் படிக்கின்ற பொழுது இவர்களுடைய தொழில் வேளாண்மை என்பது சந்தேகமில்லை என்று உணர முடிகிறது.
பெண்கள் விதை விதைத்தல்
“அரிசி முளப் போட்டு
அரமனையும் சுத்தி வந்தா
அரிசி மணமணக்கும்
அரமனையும் பூ மணக்கும்
பருப்பு முளப் போட்டு
பட்டணம் சுத்தி வந்தா
பருப்பு மணமணக்கும்
பட்டணமும் பூ மணக்கும்.”
அரவாணிகள் தங்களின் மன இறுக்கத்தினை உருக்கமாக ஒப்பாரிப் பாடலாக பாடியுள்ளனர்.
“காகிதப் பூவுண்ணு கண்மூடிப்
போனீரோ - ராசாவே
வாடாமல்லின்னு பேசாமல்
போனீரோ - நானும்
அப்பனுக்கு வேப்பங்காய்
அண்ணனுக்கு எட்டிக்காய்
ஊருக்கு திருஸ்டிக்காய்
ஒனக்கு முகூட ஊமந்தங்காய்
ஆனேனே.”
(தமிழிலக்கிய வகைமைகளும் சமூகச் சூழலும், ப.345)
என்று தனம் அரவாணி பாடியுள்ளார்.
முத்துப்பட்டியைச் சேர்ந்த சேவியர் என்னும் அரவாணி தன் ஒப்பாரிப் பாடலில்,
“செடியாய் முளைத்திருந்தால்
பூவாய் மலந்திருப்பேன்!
கொடியாய் வளர்ந்திருந்தால்
கொட்டிமேலே பூத்திருப்பேன்!
நதியாய் பிறந்திருந்தால்
கடலில் சேர்ந்திருப்பேன்!
நண்டாய் பிறந்தாலும்
வளையிலே வாழ்ந்திருப்பேன்!
இரண்டாய் பிறந்ததாலே
துண்டுபட்டு நிக்கேனே!
சூடுபட்ட மனசு
சொன்னாலும் கேக்காமே
வீடு போக வேணுமுண்ணு
வெறிபிடித்து துடிக்குதய்யா!
புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட தன் கனவுவீடு இடிக்கப்படுவதைக் கண்டு இடிந்து புலம்பும் ஏழைத் தாயின் அவலமான பாடல் ‘கூடு’ என்ற தலைப்பில் வெளிப்படுகிறது.
“ஏலே தொரச்சாமி
எங்கடா ஒங்கப்பன்
கள்ளுக்கடை பேயிருப்பான்
கையோட கூட்டியாடா
வீட்ட இடிக்கிறாக
வெறப்பாக நிக்கிறாக
ஓட்டப் பிரிக்கிறாக
ஓடிப்போய்க் கூட்டியாடா
செலந்திக் கூடழிக்கச்
சீட்டு வாங்கி வந்திகளா
சித்தெறும்ப நசுக்கத்தான்
சீப்பேறி வந்திகளா
அரைச் செண்டு வீடிடிக்க
ஆடர் வாங்கி வந்திகளா.”
(தமிழுக்கு நிறமுண்டு - வைரமுத்து)
முடிவுரை
கிராம மக்களின் அன்றாட வாழ்க்கை வயல்வெளிகளையும் களத்துமேட்டையும், நிழல் தரும் பொதுஇடங்களையும் களமாகக் கொண்டிருந்தன. இத்தகைய நிலையில் இவர்கள் பாடுகின்ற நாட்டுப்புறப் பாடல்களில் அவர்கள் வாழ்கின்ற சூழல் வெளிப்படுகிறது. இதனால் தனிமனித உறவுகள் பலப்படுகின்றது. பொருளாதார நிலையில் பரவலான பரிமாற்றம் நடைபெறுகிறது. மக்கள் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தி பண்பாடு பரிமாற்றம் நிகழ்கிறது. எனவே, நாட்டுப்புற இலக்கியம் மேன்மேலும் வளர வேண்டும். அதற்கு நாட்டுப்புறக் கலைஞர்கள் மதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு அரசும், மக்களும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்க வேண்டும்.
பார்வை நூல்கள்
1. தொல்காப்பியம் முனைவர் ச.வே.சுப்பிரமணியன், மணிவாசகர் பதிப்பகம்.
2. பாரதியார் பாடல்கள், பூம்புகார் பதிப்பகம்.
3. புறநாநூறு.
4. திருவாகசகம், பிரேமா பிரசுரம்.
5. பாரதிதாசன் பாடல்கள், ஸ்ரீசெண்பகா பதிப்பகம்.
6. நாட்டுப்புறப் பாடல்களில் சமூகப் பின்புலன், வி.கிருஷ்ணமூர்த்தி.
7. தமிழிலக்கிய வகைமைகளும் சமூகச் சூழலும்.
8. தமிழுக்கு நிறமுண்டு, வைரமுத்து.
9. தமிழ் இலக்கிய வரலாறு, பேரா.சி.சி. இலட்சுமணன்.